115 மில். அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு Hutch மற்றும் முதலீட்டு சபை உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை முதலீட்டு சபையுடன் Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் மேலதிக உடன்படிக்கையொன்றில் 2019 பெப்ரவரி 11ஆம் திகதி கைச்சாத்திருந்தது.

Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைமை அதிகாரி ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த கைச்சாத்திடும் நிகழ்வில் அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி. சம்பிகா மலல்கொடவும் கலந்து கொண்டார்.

Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் இலங்கையில் சுமார் இரண்டு தசாப்த காலப் பகுதிக்கு மேலாக இயங்கி வருவதுடன், ஹொங் கொங்கை தளமாக கொண்டியங்கும் Fortune 500 நிறுவனமான C K Hutchison நிறுவனத்தின் துணை நிறுவனமாகவும் இயங்குகிறது.
தனது வலையமைப்பை உறுதி செய்யும் வகையில், Hutchison லங்கா அண்மையில் எடிசலாட் லங்கா (பிரைவட்) லிமிடெட்டுடன் ஒன்றிணைந்துள்ளதுடன், புதிய வர்த்தக நாமமான Hutch இன் கீழ் எதிர்வரும் காலத்தில் இயங்கும்.
நிறுவனத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடராசா தெரிவிக்கையில், ‘இரு வலையமைப்புகளை ஒன்றிணைத்துள்ளதனூடாக, உருவாக்கப்பட்டுள்ள வியாபாரத்தினூடாக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு கிராமிய மற்றும் நகர மட்ட வலையமைப்பில் பெருமளவு மேம்படுத்தல் ஏற்படுத்தப்படும். சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் தொடர்பாடல்கள் சேவைகள் தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.’ என்றார்.
அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “Hutch மேல் மாகாணத்தில் 4G சேவைகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Hutch 4G வலையமைப்பினூடாக சகல வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுகூலங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.’ என்றார்.
இலங்கையில் 4G சேவைகளை வழங்கும் மூன்றாவது சேவை வழங்குநராக Hutch இயங்கும். கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், முதற் கட்ட முதலீடு 115 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என நடராசா மேலும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இலங்கையின் அபிவிருத்தியில் தொலைத்தொடர்பாடல் துறையின் விஸ்தரிப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றை இணைப்பதனூடாக தொடர்பாடல் நடவடிக்கைகளை வலுவூட்டுவதுடன், ஒரு இலங்கையாக எம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
இலங்கை முதலீட்டு சபைக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் பிரதான துறைகளில் ஒன்றாக தொலைத்தொடர்பாடல்கள் துறை தரப்படுத்தப்பட்டுள்ளது.